Sunday, August 17, 2008

கடவுள்







மரம் என்பது பொதுப் பெயர். அரசு, ஆல், அத்தி என்பன சிறப்புப் பெயர்கள். அவற்றோடு மரம் என்ற

சொல்லைச் சேர்த்து அரசமரம், ஆலமரம், அத்திமரம் என்று சொன்னால் மரம் என்ற சொல்லுக்கு அர்த்தம் உண்டு.

அரசு ஆல் அத்தி முதலியவற்றைப் பார்த்துத்தான் மரம் என்ற சொல்லின் பொருளை அறிய முடியும்.

கடவுள்

என்பது பொதுப் பெயர். சிவன், நாரணன், நான்முகன் என்பன சிறப்புப் பெயர்கள். அவற்றோடு கடவுள் என்ற

சொல்லைச் சேர்த்துச் சிவக்கடவுள், நாரணக்கடவுள், நான்முகக்கடவுள் என்று சொன்னால் கடவுள் என்ற சொல்லுக்கு

அர்த்தமுண்டு. சிவன், நாரணன், நான்முகன் என்ற சொற்களை விட்டு விட்டால் கடவுள் என்ற சொல்லுக்குப் பொருள்

கிடையாது. சிவன், நாரணன், நான்முகன் முதலியோரைப் பார்ப்பதன் மூலந்தன் கடவுள் என்ற சொல்லின் பொருளை

அறியமுடியும்.

காட்சிப் பொருள்கள் பல. மரம், பறவை, விலங்கு முதலியன அடிக்கடி கண்ணிற்படும்.

சிங்கமும் காட்சிப் பொருள். அது அடிக்கடி கண்ணிற்படாது. அதைப் பாராமலே வாழ்பவரும் இருக்கலாம். அவருக்குச்

சிங்கம் என்றசொல், அதற்கு உரையாகச் சொல்லப்படுகிற பிற சொற்கள் ஆகியவை பொருள் தெரியாச் சொற்களேயாம்.

அவர் ஒரு தடவை சிங்கம் என்ற பொருளைப் பார்த்து விட்டால் அத்தனை சொற்களுக்கும் பொருள் தெரிந்தவர்

ஆவார்.

கடவுளும் ஒரு பொருளே. ஆயினும் அது காட்சிப்படுவதன்று. அது அறிவுக்கும், சிந்தனைக்கும்

கற்பனைக்கும் எட்டாதது. கடவுள் என்ற சொல்லும், அதற்கு உரையாகச் சொல்லப்படுகிற ஆண்டவன், இறைவன்,

தெய்வம் முதலிய சொற்களும் காரணப் பெயர்களாயினும் மரம் என்ற இடுகுறிச் சொற்போல் தம்மளவில்

பொருளைக்காட்டாதனவே அவற்றைப் பொருளில்லாத சொற்கள் என்று கூடச் சொல்லிவிடலாம்.

அன்னையே

கடவுள், பிதாவே கடவுள், குருவே கடவுள், மணிநகையாரே கடவுள், கணவனே கடவுள், அறிவே கடவுள், அன்பே

கடவுள், அழகே கடவுள், கடமையே கடவுள், சத்தியமே கடவுள், சோறே கடவுள், உயிரே கடவுள், நாடே கடவுள்,

மொழியே கடவுள், சுதந்திரமே கடவுள், 'அமெரிக்காவும், ரஷியாவும் இன்று தொழும் ஒரே கடவுள் விஞ்ஞான, தொழில்

நுட்பந்தான்.' ......இந்தியாவும் அதே கடவுளைத் தொழுதால் செய்ய நினைக்கும் கடின சாதனையைச் செய்யமுடியும்

(25-5-1963 தினமணி) எனப் பிரதமர் நேரு சொன்னபடி விஞ்ஞான, தொழில் நுட்பமே கடவுள் எனக் கடவுள் என்னும்

சொல்லுக்குப் பொருள் கற்பிக்கும் மேதைகள் எத்தனைபேர்! அங்ஙனம் அவர் கற்பிப்பதற்குக் காரணம் கடவுள் என்ற

சொல் தன்னளவில் பொருளற்றது. ஆதலின் அதற்குள் எந்தப் பொருளையும் புகுத்தலாம் என்பதைத் தவிர வேறென்ன

இருக்க முடியும்? கடவுள் என்ற சொல் இன்னாருக்குப் பொருளில்லாத தாகும் என்பதை அவர்களுக்கு (அந்த

நாகரிகமான காட்டுமிராண்டிகளுக்கு) மதம் என்றால் இன்னதென்று தெரியாது. அவர்கள் விஷயத்தில் கடவுள் என்பது

பொருளற்ற ஒன்றாகும். (1-1-1963) என்று கே.எம்.முன்ஷி சொன்னதால் தெரிக. குடம் என்ற சொல்லுந் தெரியும்,

பொருளுந் தெரியும். ஆகலின் குடம் என்ற சொல்லுக்கு அம்மி முறம், துணியென வாயில் வந்தபடி பொருள்கூற

முடியாது. கூறுபவன் பித்தனே யாவான். ஆனால் கடவுள் என்ற சொல் தெரியாது. அப் பொருளைத் தெரிதற்கு

உதவுகிற நெறிநின்று தெரிய முயலாமல் அச் சொல்லுக்கு வாயில் வந்தபடி பொருள்களைக் கற்பித்தால் அக்கற்பனை

மாத்திரம் அறிவுடைமையாய் விடுமா? அக்கடவுளை வணங்குவது எப்படி ஆத்திகமாகும்? அவ்வாத்திகம் எந்த வலி

கொண்டு நாத்திகத்தைக் குறைகூற முடியும்? அவ்வணக்கம் ஊர் சிரிக்கவே இடஞ் செய்யும்.

கடவுள் என்னும்

பொருளைக் காணவே வேண்டும். மனிதராவாருக்குப் பிராணன்போலுள்ளது அம்முயற்சி. உலக கலைகளுள் எதுவும்

அப்பொருளைக் காட்டவல்ல' தாகாது. அந்த வல்லமையும், உரிமையும், தகுதியும் சமயங்களுக்குத்தான் உள.

சமயங்கள் பல. அவற்றுள் ஒவ்வொன்றும் தனக்கெனக் கடவுட் பெயரைக்கொண்டது. சைவசமயக் கடவுளுக்குச் சிவன்

என்பது பெயர். வைணவ சமயக் கடவுளுக்கு விஷ்ணு என்பது பெயர். அப்படியே மற்றைச் சமயங்களின்

கடவுளருக்கும் பெயர்கள் வேறு வேறா யுள்ளன. ஒவ்வொரு சமயத்துத் தெள்ளறிஞரும் அச்சமயத்துக் கடவுளைக்

கண்டிருக்கிறார் என அச் சமயப் பிரமாண நூற்கள் சொல்லும். ஆதலின் சிவன், நாரணன் முதலியன அரசு, ஆல், அத்தி

என்பன போலுஞ் சிறப்புப் பெயர்கள், அரசமரம், ஆலமரம் என்பன போல் சிவக்கடவுள், நாரணக்கடவுள் எனச் சொல்லிக்

காண்க. கடவுள் ஆண்டவன் முதலியவற்றைத் தமக்குக் கடவுட் பெயரெனக் கொண்ட சமயங்களில்லை. இந்நாட்டில்

நடைபெறும் பல மகா நாடுகளின் நிகழ்ச்சிப் பத்திரங்களில் கடவுள் வணக்கம், இறை வணக்கம் என

அச்சிடப்பட்டிருக்கும். அவ்விடங்களில் கடவுள், இறை என்பன பொதுப் பெயர்களே. அதை அறிக, ஆகலின் கடவுள்

என்ற பொதுப் பெயர் சிவன் முதலிய சிறப்புப் பெயர்களோடு இயைந்து வந்தால் அச்சிறப்புப் பெயர்களின் மூலம்

தனக்கெனப் பொருளுடைய தெனக்கருத இடனுண்டு.

செய்யுள், விக்குள் என்பன போல் கடவுள் என்ற

சொல்லும் உள்விகுதி பெற்ற தொழிற்பெயர். கடந்து நிற்றல் என்பது அதன் பொருள். பின்னர் அச்சொல் கடந்து

நிற்பவன் என்ற பொருளுக்கு ஆயிற்று. கடந்து நிற்பவனே உள்ளிருப்பவனு மாவன். அவன் எதைக் கடந்து நிற்பவன்?

பிரபஞ்சத்தைக் கடந்து நிற்பவன் - விசுவாதிகன். பிரபஞ்சத்துக்கு உள்ளிருப்பவன் - விசுவாந்தரியாமி.

இனிப்

பிரபஞ்சத்தின் பரப்புத்தான் எவ்வளவு? அந்த அளவை மனிதருள் எத்துணைப் பேரறிஞனாலும் அறுதியிட்டுக் கூற

முடியாது. சாத்தனுக்கு உலகந்தெரியவில்லை யென்பான் கொற்றன், கொற்றனுக்கு உலகந் தெரியவில்லை யென்பான்

குப்பன். இப்படித் தமக்கு உலகந் தெரிந்தது போல் மற்றவருக்கு உலகந் தெரியவில்லை யெனப் பலர் பிறபலரை வாய்

கூசாது குறை கூறுவர். அக்குறை கூறல் அநுதாபத்தால் நிகழ்வது முண்டு. உலகம் தமக்குத் தெரிந்ததாகக் கூறி

மகிழ்ந்து கொள்பவ ரத்தனைபேரும் தம் உலக வாழ்க்கையைக் காத்துக்கொள்ள வழி தேடுகின்றவரே யாவார்.

ஏமாறியவரைக் கண்டு, 'ஐயோ! இவர் உலகந் தெரியாமற் போனாரே' எனக் கருதி இரங்குகிற வராகவும்

அவரிருக்கலாம். அச்சமர்த்தர் தான் உலகந் தெரிந்தவரா? அல்லர் அல்லர். பின்னை உலகை உள்ளபடி

தெரிந்தவன்றான் யாவன்? 'சுவையொளி யூறோசை நாற்றமென்றைந்தின் - வகை தெரிவான் கட்டேயுலகு' என

வள்ளுவர் கூறியபடி தெரிவான் எவனோ அவனே உலகைத் தெரிந்தவன். பூதம் 5, தன்மாத்திரை 5, ஞானேந்திரியம் 5,

கன்மேந்திரியம் 5, புருடன் 1, புத்தி மனம் அகங்காரம் மூலப்பகுதி 4 ஆகத் தத்துவங்கள் 25. அவற்றின் இயல்பையும்

தொழிற்பாட்டையும் அறிந்தவனே உலகை அறிந்தவன் என்றார் உரையிற் பரிமேலழகர், அவ்வறிவு தத்துவுணர்வு

எனப்படும். அங்ஙனம் பிரபஞ்சத்தைத் தத்துவங்களாக வகைப்படுத்தி அளக்க வல்லன சமயங்களே. தத்துவம் 25

என்றது சாங்கிய நூல். பூதங்களே பிரபஞ்சம் என்கின்றன சில சமயங்கள். பூதமும் தன்மாத்திரையுமே பிரபஞ்சம்

என்கின்றன சில சமயங்கள். பூதமும் தன்மாத்திரையும் இந்திரியங்களுமே பிரபஞ்சம் என்கின்றன சில சமயங்கள்.

பூதமும் தன்மாத்திரையும் இந்திரியங்களும் பிறவற்றிலுள்ள சில பலவுமே பிரபஞ்சம் என்கின்றன சில சமயங்கள்.

தத்துவம் 25 உம் பிரபஞ்சம் என்கின்றது சாங்கியம். இப்படிச் சமயங்கள் வேறு படுகின்றன. பூதமே பிரபஞ்சம் எனக்

கூறுஞ் சமயக் கடவுள் அப்பூதத்தைக் கடந்து நிற்பான். அப்பூதத்துக்கு உள்ளிருப்பான். அதற்கு மேலுள்ள பிரபஞ்சப்

பரப்பை அவன் அறியான், உடன்படான். ஆகலின் அப்பரப்பைக் கடந்து நிற்றலோ, அதற்கு உள்ளிருத்தலோ அவனால்

முடியாது. அறியாத பொருளைக் கடந்து நிற்றல், அதற்கு உள்ளிருத்தல் எந்தச் சமயக் கடவுளுக்கும் சாத்தியமல்ல.

பூதத்துக்கு மேற்பட்ட தத்துவபேதங்களைப் பிரபஞ்சமெனக் கொண்ட சமயங்களின் கடவுளருக்கும் கடந்து நிற்றல்

உள்ளிருத்தல் என்பன அவ்வத்தத்துவங்களின் எல்லையிற்றான் சாத்தியம்.

ஆனால் அப்பரப்பின் முழுமையைத்

தெளியக் கூறுஞ் சமயமும் இருக்க வேண்டும். இல்லாமலிராது. அதுவும் ஒரு சமயமாய்த்தா னிருத்தல் கூடும்,

இரண்டு மூன்றெனப் பலவா யிருத்தற்கு அவசியமில்லை. அவ்வொரு சமயந்தான் சித்தாந்த சைவம் என்பது. அது

சாங்கிய புருடனை மறுத்து ஒதுக்கி எஞ்சிய தத்துவம் 24. காலம், நியதி, கலை, வித்தை, அராகம் புருடன், மாயை

என்ற தத்துவம் 7. சிவம் சத்தி சதாசிவம் ஈசுரம் சுத்த வித்தை என்ற தத்துவம் 5 ஆகத் தத்துவம் முப்பத்தாறுமே

பிரபஞ்சம் என்றது. தாத்துவிகத்தைத் தத்துவமெனச் சில நூல்கள் சேர்த்துப் படிக்கும். அம்முப்பத்தாறில்

எத்தாத்துவிகமுஞ் சேரவில்லை. முப்பத்தேழாந் தத்துவங் கிடையாது. ஆகவே தத்துவம் முப்பத்தாறென்பதே

பிரபஞ்சத்தின் முழுமையாகும். சைவ சமயக் கடவுளான சிவபிரானே அத்தனை தத்துவங்களை (பிரபஞ்ச

முழுவதை)யும் கடந்து நிற்பவன், விசுவாதிசன்; அவற்றுக்கு உள்ளிருப்பவன், விசுவாந்தரியாமி, ஆகலின் அவனே

கடவுள் என்னுஞ் சொல்லுக்குப் பொருள். அவனைக் காண்பதன் மூலமே அப்பொருளைக் காணலாம், நாரணன் முதலிய

பிற சமயக் கடவுளரெல்லாம் அச்சமயங்கள் வரையறுத்துள்ள பிரபஞ்சப் பரப்பளவிற்றான் வியாபகரும்

அந்தரியாமிகளுமாவர். ஆகலின் அவரெல்லாம் பரி பூரணரல்லர்.

கடவுள் என்ற சொல்லுக்கு நிறை

பொருளாயிருத்தற்குரியவன்சிவன். இப்பொருளைத் தெரிந்தவர் கடவுள் வணக்கம். இறை வணக்கம், தெய்வ வணக்கம்

எனச் சொன்னாலும் அவருக்குக் கடவுள், இறை, தெய்வம் என்ற சொற்கள். சிவனையே குறிப்பனவாகிச் சிவவணக்கமே

கொள்கையாகும். கடவுள் வணக்கம் முதலிய அவை நாரண வணக்கம், நான்முக வணக்கம் முதலியவற்றிற்

செல்வதாயிருந்தால் கடவுள் முதலிய சொற்கள் கீழிறங்கி அச்சமயங்கள் கூறும் பிரபஞ்சப் பரப்பளவிற் கட்டுப்பட்டு

ஏகதேசமாகிப் பொதுச் சொற்களாய்விடும். நாரணன் நான்முகனாதியர்க்குத் தனித்தனி இலக்கணங்கள் உள.

சிவனுக்கும் அங்ஙனமே. அவரவர்க்குரிய சமயங்களில் அவை கேட்கப்படும். அவை உதாசீனஞ் செய்யப்படுவன வல்ல.

பொருளின் தனியிலக்கணம் உதாசீனஞ் செய்யப்பட்டால் பொருள் அறியப்பட்ட தாகாது.

விநாயகக் கடவுள்

குமாரக் கடவுள் என்ற தொடர்களிலுள்ள கடவுள் என்ற சொல் சிவனுக்குரிய சிறப்புப் பெயராகி விநாயக சிவன், குமார

சிவன் என்றே பொருள்தரும். விநாயகனும், குமாரனும் 36 தத்துவங்களையுங் கடந்தவர். அத்தனைக்கும்

உள்ளிருப்பவர். ஆகலின் விநாயகன் என்ற தடத்த வடிவங் கொண்ட சிவன் என்பன அத் தொடர்களின் விரியாகும்.